செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சூத்திரனின் பிறப்பு (கவிதை)


வழக்கம் போல்
நகர் உலாச் சென்ற கடவுள்
தெரியாத்தனமாக
ஒரு வேசியின்
வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்

ஏதுமறியாத வேசிக்கு
வந்திருப்பது கடவுளென்று
தெரியாவிட்டாலும்
யாவுமறிந்த கடவுளுக்கு
அவள் வேசியென்பது
தெரிந்துவிட்டது
உள்ளே வாருங்கள் என்றாள் வேசி.
கடவுள் தயங்கினார் –
இல்லை, நான் அதற்காக வரவில்லை.
வேசி சிரித்தாள் -
நேற்றுந்தான் ஒருவன்
கவிஞன் நான்
கவிதை எழுதத்தான் வந்தேன்
என்று சொல்லிக்கொண்டு
காகிதம் பேனாவோடு வந்தான்
காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை
காலையில் தான் போனான் என்றாள்.
கடவுள் திக்கினார் -
நான் அப்.....
அதற்கு மேல்
கடவுளைப் பேசவிடவில்லை வேசி.
ஆட்கொல்லி ஆண்டவன்
ஆட்கொள்வதற்கு
வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.
சூத்திரனின்
பிறப்பை
வேதங்கள் அறிவித்தன,
பிரபஞ்சம் கொண்டாடியது
(seyonyazhvaendhan@gmail.com)

செவ்வாய், 31 மார்ச், 2015

முதலும் கடைசியும் (கவிதை)



 கடைசி ஆசை
என்னவென்று கேட்டனர்
வாழணும் என்றான்.
முதலும் முடிவுமான
ஆசையென்னவோ
அது மட்டும் தானே?
ஒருவன் மட்டுமே
உயிர் பிழைக்க
வாய்ப்பென்றதும்
பல லட்சம் பேரை
முந்திக்கொண்டு
முன் வந்து
அண்டத்துக்குள்
நுழைந்ததும்
அதனால்தானே?
முந்நூறு நாளுக்குப் பக்கம்
மூச்சடக்கி உள்ளிருந்து
பின் உதிரம் சொட்டச் சொட்ட
முட்டி மோதி தலைகுப்புற
மண்ணில் விழுந்ததும்
அதற்குத்தானே?
எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற
தத்துவங்களையெல்லாம்
ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு
வாழ்வை ருசிப்பதும்
அதனால்தானே?
இது என்ன தனிப்பட்ட
இவன் ஒருவனின் ஆசையா என்ன,
இவனுக்குள் இருக்கும்
கோடான கோடி செல்களுக்கும்
இருக்கின்ற ஆசைதானே?

சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com
 

கயிறு (கவிதை)



தொப்புள் கொடி அறுத்து
முதல் முடிச்சு
போட்டது முதல்
நாளைப் பின்னிப் பின்னி
வாழ்வைத் திரிக்கிறாய்
கால் கட்டைவிரலைக் கட்டி
கடைசி முடிச்சு
போடும் வரை

-   -   சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  

என் சடலம் (கவிதை)


நிச்சயமாகத் தெரியும்
அது
என் சடலம் தான்
கண்ணாடியில்
தினமும்
பார்ப்பதுதானே
அடையாளம்
தெரியாமல்
போய்விடுமா என்ன?
இப்போதெல்லாம்
அடிக்கடி
தென்படுகிறது
என் சடலம்
இல்லை, அது எப்போதும்
இருக்கிறது
நான்தான்
இதுவரை
கண்டுகொள்ளவில்லையோ
என் சடலத்தை?
நம் சடலத்தை
நாம் கண்டு
அழாமல்
நாயா அழும்?
வாழும் போது
என் சடலம்
எனக்கே தெரியாமல் போனால்
செத்த பின்பு
என் சடலம்
தன் சடலமென்று
தெரியாமல் போகாதா
இன்னொருவனுக்கு?
-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com

மறந்து விடாதே (கவிதை)


இன்னுமா என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்
ஆச்சரியமாய் அவள் கேட்டது
அதிர்ச்சியாக இருந்தது.
மறந்துவிடாதே என்று
விடைபெறும் போது
நீ தானே சொன்னாய்
நூறு முறை என்றேன்.
அப்படியா சொன்னேன் என்று
ஐயத்தோடு கேட்டாள்.
நன்றாக யோசித்துப் பார்த்தேன் –
மறந்து விடாதே என்றுதான் சொன்னாள்.
மறக்க மாட்டேன் என்று சொல்லவேயில்லை.

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

வெள்ளி, 6 மார்ச், 2015

என் மரணம் இன்னும் நிகழவில்லை (கவிதை)


என் மரணம் இன்னும் நிகழவில்லை

என் மரணம்
நிகழ்ந்து விட்டதாக
என் எதிரிகள் தான்
தொலைக்காட்சியில்
முதலில் அறிவித்தார்கள்
ஒரு பிணத்தின்
கழுத்தருகே
என் முகத்தையும்
வைத்துக்காட்டினார்கள்
எனக்கு
அந்நியமானவர்கள் முதல்
அன்னியோன்னியமானவர்கல் வரை
அனைவருமே
என் மரணத்துக்கு
இரங்கல் தெரிவித்தார்கள்
என் மரணத்தை
அவர்கள்
உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்
என் மனத்தின்
அடியாழத்தில்
ஏதோவோர் ஓரத்தில்
ஒரு சிறு நம்பிக்கையின்
கீற்று
நான் மரணிக்கவில்லையென்று
சொல்கிறவரை
என் மரணத்தை
எப்படி நான் நம்ப முடியும்.
என் அடையாளம்
அவன்.
அவன் வேறு
நான் வேறோ?

எழுநூறு கோடி மனிதர்கள்
இருப்பதாய் நம்பும்
கடவுள்
இருக்கிறாரா என்று
எப்படி சந்தேகிப்பதில்லையோ
அப்படியே
எட்டு கோடி தமிழர்கள்
நம்பும்
ஒரு மனிதன்
இருப்பதை நாங்கள்
சந்தேகிப்பதில்லை.

அவரவர் அகராதிகள் (கவிதை)


அவரவர் அகராதிகள் 


நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை 
நீ கடைக்கண்ணால் பார்த்தாய்.
நான் மகிழ்ந்தது 
உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல;
குடை இருந்தும்
நான் நனைய முடிந்தற்காகவே.

உன் கூந்தலிலிருந்த ரோஜா
கீழே விழுந்ததை
நான் வருத்தத்துடன் பார்த்ததை 
நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்.
நான் வருந்தியது 
உன் கூந்தலிலிருந்து
ரோஜா விழுந்ததற்காக அல்ல,
அது விழுந்ததற்காகவே.

என் மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் 
உனது அகராதியில் 
அர்த்தப்படுத்திக்கொண்டு,
ஓர் ஏளனப் பார்வையோடு
எனக்குக் குடையும் விடையும் தந்து
நீ நிழற்குடையில் ஒதுங்கினாய்.
அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 
உனக்கு
என்ன கிடைத்தது?
எனக்கு -
ஒரு கவிதை.
-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)