கடைசி ஆசை
என்னவென்று கேட்டனர்
வாழணும் என்றான்.
முதலும் முடிவுமான
ஆசையென்னவோ
அது மட்டும் தானே?
ஒருவன் மட்டுமே
உயிர் பிழைக்க
வாய்ப்பென்றதும்
பல லட்சம் பேரை
முந்திக்கொண்டு
முன் வந்து
அண்டத்துக்குள்
நுழைந்ததும்
அதனால்தானே?
முந்நூறு நாளுக்குப்
பக்கம்
மூச்சடக்கி உள்ளிருந்து
பின் உதிரம் சொட்டச்
சொட்ட
முட்டி மோதி தலைகுப்புற
மண்ணில் விழுந்ததும்
அதற்குத்தானே?
எதற்கிந்த நிலையில்லா
வாழ்வென்ற
தத்துவங்களையெல்லாம்
ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு
வாழ்வை ருசிப்பதும்
அதனால்தானே?
இது என்ன தனிப்பட்ட
இவன் ஒருவனின்
ஆசையா என்ன,
இவனுக்குள் இருக்கும்
கோடான கோடி செல்களுக்கும்
இருக்கின்ற ஆசைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக